PSBB பள்ளி ஆசிரியரை அடுத்து, சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளதால், அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த சில தினங்களாக பத்மா சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளி விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இங்கு பணியாற்றிய ராஜகோபாலன் வரதாச்சாரி என்ற ஆசிரியர், வகுப்பில் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் அத்துமீறியதாகவும்,

ஆன்லைன் வகுப்புகளின் போதும் எல்லை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவிகளுக்கு இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களை ராஜகோபாலன் செய்துள்ளதாக அப்பள்ளியின் தற்போதைய மற்றும் முன்னாள் மாணவிகளும் புகார் அளித்தனர். இது சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இதனையடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலனை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்குமாறு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ (POCSO Act) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஒரு ஹெல்ப்லைன் உருவாக்கப்படும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளில் தவறாக நடப்போர் மீது ‘போக்சோ சட்டம்’ பாயும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இந்நிலையில், PSBB பள்ளியை போல் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு வணிகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவிகள் பலர் தங்களை ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டியுள்ளனர்.

ஆசிரியர் ஆனந்த் பல வருடமாக மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அவர்களை தேவையில்லாமல் தொட்டுத் தொட்டுப் பேசுவது, முத்தம் தருவது, அணைப்பது, மிரட்டுவது என்று பல்வேறு அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்துள்ளன. அவர் மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஆசிரியர் ஆனந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்கள் மூலமும் இ-மெயில் மூலமாகவும் முதுகலை வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நேர்மையான முறையிலும் வெளிப்படையாகவும் நடைபெறும். அக்குழு விரைவில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

ஆசிரியர் ஆனந்த் மே 26 ஆம் தேதி அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் பள்ளியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களுடன் எவ்விதத்திலும் தொடர்புகொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்” என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது