ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, ஐ.ஏ.எஸ் அதிகாரி சண்முகம் ஆகியோரை குற்றவாளி எனக் கூறி, தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சி அமைத்த போது 1991 முதல் 1996 வரை அதிமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அந்த ஆட்சிக் காலம் முடிந்த பிறகு, அதில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

அதேபோல இந்திரகுமாரி அமைச்சராக போது ஊழல் செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்து சர்ச்சையானது. இந்திரகுமாரி மீது, பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விடுவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, 1997ல் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் இந்திரகுமாரி தற்போது தண்டிக்கப்பட்டிருக்கிறார். 1992- 96 ஆம் ஆண்டு அவரது கணவரும், வக்கீலுமான பாபு, ‘மெர்சி மதர் இந்தியா’ மற்றும் ‘பரணி சுவாதி’ என்ற பெயர்களில் அறக்கட்டளைகளை தொடங்கினார்.

இவற்றின் மூலமாக காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளும் தொடங்குவதாக கூறி அரசிடமிருந்து ரூ.15 லட்சத்து 45 ஆயிரம் பெற்றனர். ஆனால் அதன்படி அவர்கள் இந்த பள்ளிகளை தொடங்கவில்லை.

இது தொடர்பாக 1997 ஆம் ஆண்டு சமூக நலத்துறை செயலாளராக இருந்த லட்சுமி பிரானே புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி, சமூக நலத்துறை முன்னாள் செயலாளர் கிருபாகரன், ஊனமுற்றோர் மறுவாழ்வு துறை முன்னாள் இயக்குனர் சண்முகம், இந்திரகுமாரியின் கணவர் பாபு, இந்திர குமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

[su_image_carousel source=”media: 26663,26664″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

இதன் விசாரணை முடிந்து சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர்.

இதன் மூலம் ரூ.15 லட்சத்து 45 ஆயிரம் அரசு பணம் மோசடி செய்யப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

பின்னர் இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்பி., எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி அலிசியா வழக்கை விசாரித்து வந்தார்.

அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டு விசாரணை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி கிருபாகரன் இறந்து விட்டார். இதனால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (29.09.2021) அந்த வழக்கு நீதிபதி அலிசியா அலிசியா தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில் இந்திரகுமாரி, அவருடைய கணவர் பாபு, முன்னாள் அதிகாரி சண்முகம் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு ஆகியோருக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், சண்முகத்துக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வெங்கடகிருஷ்ணன் தரப்பு குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். தீர்ப்பு விதிக்கப்பட்டதும், தங்கள் வயதின் காரணமாக தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென குற்றவாளிகள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கவில்லை.

ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திரகுமாரி தற்போது திமுகவில் மாநில இலக்கிய அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு மாணவர்களுக்கு நன்மையா தீமையா.. தமிழ்நாட்டை பின்பற்றும் மகாராஷ்டிரா அரசு