உத்தரப் பிரதேசத்தில் 2 ஆம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் தலைகீழாக தொங்கவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிக் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சக மாணவனை கடித்த சோனு யாதவ் என்ற 2 ஆம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா அழைத்து கண்டித்துள்ளார்.

பிறகு சக மாணவனிடம் மன்னிப்பு கேட்குமாறு சோனுவிடம் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா கூறியுள்ளார். ஆனால் சோனு மன்னிப்பு கேட்காததால் ஆத்திர மடைந்த தலைமை ஆசிரியர் அச்சிறுவனை பள்ளி மேல் தளத்துக்கு இழுத்துச் சென்றுள்ளார்.

பிறகு சிறுவனின் காலை பிடித்துக் கொண்டு அச்சிறுவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு, மன்னிப்பு கேட்குமாறு பயமுறுத்தியுள்ளார். இதில் சோனு அலறி அழத் தொடங்கியதால் சக மாணவர்கள் அங்குகூடினர். இதனையடுத்து அச்சிறுவனை தலைமை ஆசிரியர் விடுவித்தார்.

இச்சம்பம் குறித்து சோனுவின் தந்தை ரஞ்சித் யாதவ் கூறும்போது, “தலைமை ஆசிரியர் செய்தது தவறாக இருந்தாலும் எனது மகன் மீதான அன்பின் காரணமாகவே அவ்வாறு செய்துள்ளார்” என்றார்.

தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா கூறும்போது, “சோனு மிகவும் குறும்புக்காரன். குழந்தைகள் மட்டுமின்றி ஆசிரியர்களையும் அவன் கடித்துள்ளான். அவனை திருத்துமாறு அவனின் தந்தை கூறியிருந்தார். எனவே நாங்கள் அச்சுறுத்த முயன்றோம்” என்றார்.

இந்நிலையில் சோனுவை தலைமை ஆசிரியர் தலைகீழாக தொங்கவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா நேற்று (29.10.2021) கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.