சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெற இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி வீரரான ஷேன் வாட்சன் (வயது 39) 59 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,731 ரன்கள் குவித்துள்ளார். 75 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். மேலும் 199 ஒருநாள், 56 டி20 போட்டிகளில் விளையாடியவர்.

கடந்த 2016 மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையுடன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஒருநாள் மற்றும் ஐபிஎல் போன்ற சில போட்டிகளில் கவனம் செலுத்துவதாக கூறியிருந்தார்.

இதையடுத்து 2018ஆம் முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் வாட்சன், அதே வருடம் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். அதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகளுக்காக விளையாடியுள்ள வாட்சன், 145 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவற்றில் 43 ஆட்டங்கள் சிஎஸ்கேவுக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஐக்கிய அரபு எமரேட்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன், சிஎஸ்கே மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக ஷேன் வாட்சன் 2019ஆம் ஆண்டு மும்பைக்கு எதிரான இறுதிப்போட்டியில் முழங்காலில் ரத்தம் சொட்டச் செட்ட விளையாடி சென்னை அணி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடருடன் ஓய்வா… சர்ச்சையான பி.வி.சிந்துவின் ட்வீட்