சமூக வலைதளத்தில் தனக்கு அறிவுரை வழங்கிய பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக்கிற்கு தக்க பதில் அளித்துள்ளார் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவர் ஷோயப் மாலிக் விளையாடினார். அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

அப்போட்டிக்கு பிறகு சானியா தனது கணவர் மற்றும் மகனுடன் உணவகம் ஒன்றில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படங்களை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் நம் நாடு ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததில் கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் இப்படி ஜாலியாக ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களே என்று மாலிக் மற்றும் சானியா மிர்சாவை விளாசினார்கள்.

சானியா, மாலிக், குழந்தையின் புகைப்படத்தை பார்த்த பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக், நான் உங்களின் குழந்தையை நினைத்து கவலைப்படுகிறேன். ஷீஷா இடத்திற்கு குழந்தையை தூக்கிச் செல்வது நல்லது இல்லையே. ஆர்ச்சீஸில் ஜங்க் புட் தான் கிடைக்கும் அது குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது இல்லை. நீங்கள் ஒரு தாய் மற்றும் வீராங்கனை என்பது உங்களுக்கே தெரிந்திருக்க வேண்டும் என்று ட்வீட் செய்தார்.

வீணாவின் ட்வீட்டைடிற்கு பதில் அளித்த சானியா மிர்சா, வீணா நான் என் குழந்தையை ஷீஷா இடத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. என் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும். மேலும் நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீஷியனோ அவர்களின் ஆசிரியையோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நான் மட்டும் உங்கள் இடத்தில் இருந்தால் பத்திரிகையின் அட்டைப்படத்தில் வந்த மோசமான புகைப்படங்கள் உங்களின் பிள்ளைகள் பார்ப்பது பற்றி கவலைப்பட்டிருப்பேன். அது ஆபத்தானது அல்லவா? இருப்பினும் உங்களின் அக்கறைக்கு நன்றி என்று சானியா ட்வீட் போட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனால் நெட்டிசன்கள் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துள்ளனர்.

இதற்கு வீணா மாலிக், கொஞ்சம் தைரியமாக இருங்க மற்றும் ட்வீட்டுகளை நீக்க வேண்டாம். தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறிவிட்டது மக்கள் தாங்கள் செய்ததை மறுக்க முடியாது. நீங்கள் சொன்ன பத்திரிகை அட்டைப்படம் மார்பிங் செய்யப்பட்டது. நீங்கள் சந்தித்த சர்ச்சைகளை என்னாலும் சொல்ல முடியும் ஆனால் அதை செய்து கவனத்தை திசை திருப்ப விரும்பவில்லை என்று பதில் அளித்துள்ளார்.