ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிப்பதே இல்லை. எங்களுடைய பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீப காலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்து வரும் கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. டெல்லியில் கடந்த மாதம் தேசிய சட்டசேவைகள் ஆணைய நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, காவல்நிலைய லாக்கப் மரணங்களை கடுமையாக விமர்சித்தார்.
அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளையும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்தார். நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதனால் சட்டங்களின் உள்நோக்கம் என்ன என்பது புரியாமல் போய்விடுகிறது.
இப்படி விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றபப்டுவதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் முந்தைய விவாதங்கள் அறிவுப்பூர்வமாக இருந்தன என்று குறிப்பிட்டிருந்தார். தலைமை நீதிபதியின் இந்த கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக சாடின.
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி ஏன் சட்டங்களை இயற்றுகிறார்கள்- தலைமை நீதிபதி ரமணா
இந்நிலையில் தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளில் நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இன்று (செப்டம்பர் 07) தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு பலமுறை உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவை ஒன்றிய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே பலமுறை கால அவகாசமும் வழங்கிவிட்டோம். ஆனால் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிப்பதே இல்லை. எங்களுடைய பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம்.
ஒன்றிய அரசுடன் நாங்கள் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்ப இல்லை. தீர்ப்பாயங்களில் பணியிடங்கள் காலியாக இருப்பதை நிரப்பாமல் விட்டால் அத்தனை பணிகளும் முடங்கி போய் நிர்வாகம் சீர்குலையும். இரண்டு ஆண்டுகளாகியும் காலி பணியிடங்களை ஏன் நிரப்பாமல் இருக்கிறீர்கள்.. தீர்ப்பாயங்கள் நாட்டுக்கு மிக முக்கியமானவை.
எனவே ஒன்றிய அரசு செப்டம்பர் 13 ஆம் தேதிக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இல்லை எனில் நீதிமன்றத்துக்கு 3 வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று தீர்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான நியமனங்களை நிரப்ப நீதிமன்றமே உத்தரவிட்டு நிரப்புவது;
அல்லது அத்தனை தீர்ப்பாயங்களையும் மூடிவிட்டு வழக்குகளை உயர்நீதிமன்றங்களை இனிமேல் விசாரிக்க சொல்லலாம் அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத ஒன்றிய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடருவது ஆகியவைதான் என கடுமையாக சாடியுள்ளார்.
உ.பி. மாநாட்டில் திரண்ட லட்சக்கணக்கான விவசாயிகள்- செப்டம்பர் 27 பாரத் பந்த்!