பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் பெற்று சொகுசு வசதி செய்து கொடுத்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் முதன்மை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நகரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு லஞ்சம் பெற்று கொண்டு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சமூக ஆர்வலர் கீதா என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 07) விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு குற்றச்சாட்டிற்கு உள்ளான சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்திய நாராயணன்,

சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துறைரீதியான அனுமதிக்கு காத்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

[su_image_carousel source=”media: 26304,26303″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், குற்றச்சாட்டு எழுந்து பல ஆண்டுகள் ஆகியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும் 30 நாட்களுக்குள் உரிய அனுமதி பெற்று குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,

இல்லையெனில் உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே வழக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டவர்களிடம் இதுவரை லஞ்சம் ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி