சிறுமியை ஆடைகளோடு அந்தரங்க பகுதியில் தொடுவது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சீண்டல் ஆகாது என நாக்பூர் உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு, சிறுமிகளின் ஆடைகளை களையாமல் அந்தரங்க பாகங்களை தொடுவது பாலியல் துன்புறுத்தலில் அடங்காது.

எனவே இந்த வழக்கு போக்சோ சட்ட பிரிவின் கீழ் வராது. சட்டப்படி இதுபோன்ற செயல்கள் பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின் கீழ் தான் வரும் என்று இந்திய தண்டணை சட்டம் 354ன் கீழ் நீதிபதி புஷ்பா கனேடிவாளா, குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ் என்ற நபரின் தண்டனையை ஓர் ஆண்டாக குறைத்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்ததோடு, கடும் கண்டனங்களும் எழுந்தது. இந்நிலையில், நாக்பூர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி நாக்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு போக்சோ சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப்போகச் செய்துவிடும். இது ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். நாக்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் குற்றம் புரிபவர்கள் தப்பித்துக்கொள்வார்கள் என சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததோடு, மகாராஷ்டிரா அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

போக்ஸோ (POCSO Act):
POCSO – Protection of Children from Sexual offences இது இந்தியாவில் குழுந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க உருவான சட்டம். இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. போக்ஸோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8 படி, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, அல்லது மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொட வைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. இதில் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். அபராதமும் உண்டு.

இந்திய தண்டணை சட்டம் 354 (IPC 354): ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவது, தாக்க முனைவதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லை- உயர்நீதிமன்றம்