தமிழ்நாடு சட்டசபையில் இன்று (6.4.2022) சொத்து வரியை குறைக்க கோரி பல்வேறு கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டிருந்தது. இதன் மீது உறுப்பினர்கள் பேசுவதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.

சொத்து வரி உயர்வு குறித்து அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது பெரும் அதிர்ச்சியாக சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

மக்கள் வருமானம் இன்றி வாழ்க்கையை நடத்தும் இந்த சூழலில் சொத்து வரியை இந்த அரசு உயர்த்தி இருப்பது மக்கள் மீது பெரிய சமையை உண்டாக்கும். எனவே இந்த அரசு சொத்து வரியை திரும்ப பெற வேண்டும்.

ஒன்றிய அரசு சொத்து வரியை உயர்த்த சொன்னதால்தான் உயர்த்தியதாக மாநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேற்று சொன்னதை ஊடகங்களில் பார்த்தேன். சொத்து வரியை உயர்த்த ஒன்றிய அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. வரியை வசூலிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தான் கூறியுள்ளது.

திமுக.வின் தேர்தல் அறிக்கையில் 487-வது வாக்குறுதியில் கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் சொத்துவரி அதிகரிக்கப்படமாட்டாது என்று கூறியுள்ளது. எனவே இந்த சூழலில் சொத்து வரியை திடீரென உயர்த்தியது மக்களை மிகமிக பாதிக்கக்கூடியது. எனவே சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை பேசும்போது, “ஆண்டு தோறும் சொத்து வரியை விதிக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்காக சொத்து வரியை சீராய்வு செய்ய வழிகாட்டுதலையும் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் வரிவிதிப்பு குறைவாக இருக்கிறது. என்றாலும் நாங்கள் என்ன விரும்புகிறோம் என்றால் இப்போது உயர்த்தப்பட்டுள்ள வரியால் 7% மேல்தட்டு மக்கள்தான் அதிகவரி செலுத்தி உள்ளனர். 93% மக்களுக்கு சிறிய பாதிப்புதான் ஏற்படும். எனவே இதை நன்கு ஆராய்ந்து வாய்ப்பு இருந்தால் வரியை கொஞ்சம் குறைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாது. வரி இல்லாமல் அரசை நடத்த முடியாது. இந்த சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மடங்கு வரி உயர்வு என்பது முற்றிலும் பாதிக்கும். எனவே மக்களுக்காக இப்போதுள்ள வரியை குறைக்க வேண்டும். வரிவிதிப்பதில் சமச்சீரான முடிவுக்கு வரவேண்டும்.

பாமக கட்சியின் ஜி.கே.மணி கூறுகையில், “சொத்து வரி உயர்வு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக ஒன்றிய அரசு ஆண்டுதோறும் வரியை உயர்த்த அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் மக்கள் 2 ஆண்டுகளாக மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே சொத்து வரி உயர்வை திரும்பபெற வேண்டும்” என்று கூறினார்.

இதன்பிறகு அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “வரிகள் உயர்த்தப்படும் போது அது எதற்காக உயர்த்தப்படுகிறது என்று கடந்த அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களே விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிறு சிறு கட்டணங்கள், வரியை உயர்த்துவது தவிர்க்க முடியாதது. மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அது போன்று ஏற்றாமல் இருந்தால் நிதிச்சுமை ஏற்படும் என்று நீங்களே கூறி இருக்கிறீர்கள்” என்றார்.

இதன்பிறகு அமைச்சர் கே.என்.நேரு, சொத்து வரி உயர்வு தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, “கடந்த 2018 ஆம் ஆண்டில் உங்கள் ஆட்சியின்போது சொத்துவரியை பலமடங்கு உயர்த்தினீர்கள். 2019 ஆம் ஆண்டு தேர்தல் காரணமாக அதை நிறுத்தி வைத்தீர்கள்.

சென்னையை பொறுத்த வரையில் நிலத்தின் மதிப்பு ரூ.1000-ல் இருந்து ரூ.5000 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அண்ணாநகர் போன்ற பகுதிகளில் இதை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது மக்கள் நல திட்டங்களை செயல்படுத்து வதற்காகவும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள வசதியாகவே குறைந்த அளவில் சொத்து வரியை உயர்த்தினீர்கள்.

வீடுகள் 300 சதவீதம் அளவுக்கு உயர்த்தினீர்கள். நாங்கள் 50, 100, 150 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே உயர்த்தி இருக்கிறோம். சென்னையில் 600 சதுர அடி கட்டிடத்துக்கு தற்போது சொத்து வரியாக ரூ.3240 வசூலிக்கப்பட்டு வருகிறது. வரி உயர்வின் படி இனி ரூ.4860 வசூலிக்கப்படும்.

ஆனால் பெங்களூரில் 8,660 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று பல மாநிலங்களில் சொத்து வரி அதிகமாக உள்ளது. நாங்கள் தான் மிக மிக குறைவாக உயர்த்தி இருக்கிறோம். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி பொது சீராய்வு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், எங்களுடைய கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய தலைவர்கள் உள்பட அனைவரும் தங்களுடைய கருத்துக்களையெல்லாம் இங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள்.

அதற்குரிய விளக்கத்தை நேற்றைய தினம் நம்முடைய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பத்திரிகையாளர்களை அழைத்து, எடுத்துச் சொல்லியிருந்தாலும், சட்டமன்றத்திலும் அதற்குரிய விளக்கத்தை முறையாக வழங்கிட வேண்டுமென்று நான் அவருக்குத் தந்த உத்தரவின் அடிப்படையிலே, அவரும் இங்கே சில விளக்கங்களையெல்லாம் உங்களிடத்திலே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. சுருக்கமாக நான் தெரிவிக்க விரும்புவது, இந்த சொத்து வரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை. நான் அதை மனப்பூர்வமாக இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்று கூறுகிறபோது, அதைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு ஏற்பட்டது. ஏனென்றால், முன்பு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தேக்க நிலையில் இருந்தன.

மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வருவாய்ப் பற்றாக்குறையால், மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பணிகளை நிறைவேற்றுவதில்கூட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அதை சோதனையாக சந்தித்துக் கொண்டிருந்தன.

ஆனால், இப்போது அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த உள்ளாட்சி அமைப்புகளிலே பொறுப்பேற்றிருக்கக் கூடியவர்கள் அரசிடம் என்ன எதிர்பார்ப்பார்கள்? அங்கே ஆற்றவேண்டிய பணிகளுக்கு, திட்டங்களுக்கு நிதியை எதிர்பார்ப்பார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் மக்களை பாதிக்காமல், குறிப்பாக அடித்தட்டு மக்களை, ஏழை, நடுத்தர வகுப்பு மக்களை பாதிக்காமல், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளை மனதிலே வைத்துக் கொண்டு, சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், தற்போது நடைமுறைப்படுத்தக்கூடிய சொத்து வரி சீராய்விலே, கட்டடங்களின் பரப்பளவிற்கு ஏற்றவாறு பிரித்து, வரி உயர்வு செய்யக்கூடிய திட்டம் இதிலே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், நகர்ப்புறத்தில் மொத்தம் உள்ள குடியிருப்புகளைப் பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 83 விழுக்காடு மக்களை இந்த வரி விதிப்பு பெரியதாக பாதிக்காது என்பதுதான் உண்மை. ஆகவேதான், பத்திரிகைகளும், ஊடகங்களும்கூட இந்த அரசினுடைய முயற்சியைப் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கூடிய கட்டாயம், அதற்கு நிதி ஆதாரம் அவசியம் தேவை என்றும், இப்போதுள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்றும் நேற்றையதினம் தினத்தந்தி பத்திரிக்கையின் தலையங்கத்திலேயே இதுகுறித்துக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

பேரவையில் அமர்ந்திருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவரையும், இந்த அரசின் சார்பிலே பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புவது, கட்சி வேறுபாடின்றி நான் சொல்ல விரும்புவது, அரசின் இந்த முடிவுக்கும், மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றிடவும், நம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும் என்பதுதான்.

எதிர்க்கட்சி மற்றும் எங்கள் தோழமைக் கட்சிகளுக்கும் எனது அன்பான ஒரு வேண்டுகோள்! மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்திட வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் மட்டுமின்றி, இங்கு அமர்ந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் சட்டமன்றத் தலைவர்களையும் கேட்டு, அமர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், சொத்து வரி உயர்வு தொடர்பான முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையில் இருந்து அதிமுக, பாஜக இரு கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.