தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்கள் பரப்பி, இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக 22 யூட்யூப் சேனல்களை முடக்கி உள்ளது ஒன்றிய அரசு.

ஒன்றிய அரசு கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் இந்தியாவில் இயங்கி வந்த 18 யூடியூப் சேனல்கள், 4 பாகிஸ்தான் சேனல்கள் உள்ளிட்ட 22 யூடியூப் சேனல்களை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் ராணுவ அமைப்பு, ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசின் தலையீடுகள் குறித்து, பல யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன.

இவை தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டவை. மேலும் தற்போது தடை செய்யப்பட்ட யூட்யூப் சேனல்களில் 4 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவையாகும். முன்னதாக பொய் தகவலை பரப்பிய சேனல்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக, சில இந்திய யூட்யூப் சேனல்களில் வெளியான தவறான தகவல்கள் இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள், உலக நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவு ஆகியவற்றின் மீது, அவதூறு பரப்பும் நோக்கத்தோடு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

22 யூட்யூப் சேனல்கள் மட்டுமின்றி, 3 ட்விட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு ஆகியவற்றையும் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக.அரசு பொறுப்பேற்ற பின், தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முடக்கப்பட்ட யூடியூப் சேனல்களின் விவரங்கள் :

ARP News, AOP News, LDC News, SarkariBabu, SS ZONE Hindi, Smart News, News23Hindi, Online Khabar, DP news, PKB News , KisanTak, Borana News, Sarkari News Update , Bharat Mausam, RJ ZONE 6, Exam Report, Digi Gurukul மற்றும் பாகிஸ்தான் யூடியூப் சேனல்களான DuniyaMeryAagy, Ghulam NabiMadni, HAQEEQAT TV, HAQEEQAT TV ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.