வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசையில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் – பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது. 

மணிக்கு 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்ந்தது. அதன்பின்னர் மணிக்கு 4 கிமீ என அதன் வேகம் குறைந்தது. மேற்கு – தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல், 15-ந்தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று பிற்பகல் சென்னையில் இருந்து 690  கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 790 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்த புயல் கஜா படிப்படியாக வேகம் எடுத்து மணிக்கு 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசைநோக்கி நகரத் தொடங்கியது. 

அதன்பின்னர், மேற்கு-தென்மேற்கு நோக்கி நகரும் புயல் பாம்பன்- கடலூர் இடையே நவம்பர் 15-ம் தேதி பிற்பகல் கரைகடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

கஜா புயலால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அணைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோருக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.