வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, ஒன்றிய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் இதுவரை விவசாயிகளின் குரலுக்கு செவிசாயக்கவில்லை. இதனால் விவசாயிகள் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா மற்றும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். மேலும் விவசாயிகளுக்கும், பாஜக கட்சித் தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பின்னர் வன்முறையாக மாறியது.

அப்போது உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா, ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது.

இதில் கார் மோதியதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினரின் காரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

[su_image_carousel source=”media: 26859,26857,26858″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இதனால் லக்கிம்பூர் பகுதியில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஏராளமான காவல்துறையினர் லக்கிம்பூர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக பாஜக ஆளும் ஹரியானாவில் நெல் கொள்முதலை தாமதமாக்குவதை கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக ஆளுங்கட்சியினரின் வீடுகளை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது பாஜக அரசு தாக்குதலை கையாண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லக்கிம்பூரில் போராடும் விவசாயிகள் மீது காரை மோதச் செய்து வன்முறையில் ஈடுபடுவது, தொடர்ந்து பாஜக அரசின் சர்வாதிகாரத்தையும் கொடுமையையும் நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனக் குரல் எழுப்பி உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஒன்றிய அமைச்சர் அஜய் மிஷ்ரா கூறுகையில், “எனது மகன் சம்பவ இடத்தில் இல்லை. விவசாயிகள் மக்களை கொலை செய்தார்கள். காரை சேதப்படுத்தியதுடன், அதற்கு தீவைத்தார்கள். எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. இதனால் எங்களது கார் கூட்டத்திற்குள் புகுந்தது” என்று விளக்கமளித்துள்ளார்.

கொரோனா காலத்தில் தினசரி ரூ.1,002 கோடி வருமானம்- மோடி ஆட்சியில் அதானியின் அசுர வளர்ச்சி