தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று (5.4.2022) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான 8 மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

சென்னை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தேர்தல் நேரத்தில் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியை பிடித்தது. தேர்தல் அறிக்கையில் கொரோனாவால் பொருளாதாரம் முடங்கிவிட்டதால் நிலைமை சீரடையும் வரை சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்று கூறி இருந்தார்கள்.

ஆனால் இப்போது 150% வரியை உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் ஏழை, எளிய மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

கொரோனா 4-வது அலையும் வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார். இந்த சூழ்நிலையில் மக்களை வதைக்கும் வகையில் வரி உயர்வை அறிவித்துள்ளார்கள். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருமோ அப்போதெல்லாம் மக்கள் விரோத ஆட்சியாகவே இருக்கிறது.

10 ஆண்டுகள் வரியில்லாத, சுமையில்லாத ஆட்சியை அதிமுக வழங்கியது. திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்போம் என்றார்கள். ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்றார்கள். சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என்றார்கள்.

இப்படி பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அவர்களது சுய நலமும், இரட்டை வேடமும் மக்களுக்கு தெரிந்துவிட்டது. மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். மக்கள் வடிக்கும் கண்ணீருக்கு திமுக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை நீட் தேர்வை ரத்து செய்வது என்றார்கள். செய்ய முடிந்ததா? ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போறாரு என்றார்கள். எந்த விடியலையும் காணவில்லை. வரியைத்தான் போட்டு இருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்திய போது ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் போராடினார். நாங்களும் திரும்ப பெற்றோம். இப்போது சொல்கிறேன். இந்த அநியாயவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டமாக வெடிக்கும்.

அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்களை இடமாற்றி பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு கைவிட வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் தொழிற்சங்கம் சார்பில் மிகப்பெரிய அறப்போராட்டம் நடக்கும்” என்று கூறினார்.

அதேபோல் திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசு தான் வீட்டு வரியை உயர்த்த சொல்லி உள்ளது என்கிறார், ஆனால் அப்படி எங்கும் ஒன்றிய அரசு குறிப்பிடவில்லை. ஒன்றிய அரசின் மீது வீண்பழி போட்டு ஏமாற்ற பார்க்கின்றனர்.

இந்தியாவிலேயே தேர்தல் அறிக்கையை புத்தகம் போட்டு வெளியிட்ட கட்சி திமுக தான். அதிலும் குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் 487வது அறிவிப்பில் சொத்துவரி உயர்த்தப்படாது என்று சொல்லிவிட்டு தற்போது ஏன் உயர்த்தபட்டது ஏன்.

அதிமுக ஆட்சியில் தொலை நோக்கு திட்டமான தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவி திட்டம் மூலம் பல லட்சம் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலன் அடைந்தார்கள். ஆனால் இந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக கொரோனோவால் வேலை, வாழ்வாதராம் இல்லாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நேரத்தில் இந்த அரசு 150% சொத்து வரியை உயர்த்தி உள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலை அல்லாமல், அவரது வீட்டு மக்களை பற்றி தான் கவலைபட்டு கொண்டு உள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களில் ஊழல் நடைபெறுகிறது. ஒரு சிமெண்ட் மூட்டைக்கு 30 ரூபாய் திமுகவிற்கு செல்கிறது என்றால் எவ்வளவு கோடி செல்லும் என மக்கள் என்னி பார்க்க வேண்டும்.

விளம்பரத்தில் தான் திமுக அரசு இயங்கி வருகிறது, இல்லை என்றால் எப்போதே காணாமால் போய் இருப்பார்கள். 10 மாதத்தில் திமுக என்ன திட்டத்தை கொண்டு வந்தது, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்திற்கு எல்லாம் ரிப்பன் கட் பன்னி வருகிறார்கள். நாம் பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைத்து வருகிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டபேரவை தேர்தல் வந்தாலும் வரலாம் என பிரதமரே கூறி உள்ளார். எனவே கிடைத்த வாய்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரம் அதிகரித்துவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, காவல் துறை செயல் இழந்து விட்டது. பெண்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டீ, குடிப்பதையும், நடைபயிற்சி செய்வதையும், பளு தூக்குவதையும் தான் அதிக அளவில் பத்திரிகை செய்திகளில் போட்டுக்கொண்டே இருக்கிறார். எனவே அடுத்த உலக பளு தூக்கும் போட்டிக்கு முதலமைச்சர் ஸ்டாலினை அனுப்பிவிட வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி ஆர்பாட்டத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.