இயற்கை சுற்றுச்சூழல்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் அவசர ஆலோசனையில் டெல்லி அரசு..

வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் வெட்டுக்கிளிகள் சூழ்ந்து காணப்பட்டதால் டெல்லி அரசு அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் பெரும் திரளாக வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. குருகிராம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வான்வெளியிலும், தெருக்களிலும், சாலைகளிலும் ஏராளமான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டுள்ளன. கூட்டம் கூட்டமாக படையெடுத்த வெட்டுக்கிளிகளால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

குருகிராமில் உள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளை சுற்றியும் வெட்டுக்கிளிகள் அராஜகம் செய்து வருவதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெட்டுக்கிளிகள் கூட்டத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வெட்டுக்கிளிகளின் படை குருகிராமில் இருந்து ஃபரிதாபாத்துக்கு நகர்ந்துள்ளது. குருகிராம் மட்டுமல்லாமல் ஜஜ்ஜர் மாவட்டத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் வெட்டுக்கிளிகளை சமாளிப்பதற்காக குருகிராம் மக்கள் பாத்திரங்களால் சத்தம் எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் விரட்டி வருகின்றனர். காற்றும் பலமாக வீசிவருவதால் வெட்டுக்கிளிகள் வேகமாக நகருவதற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனையடுத்து, தலைநகர் டெல்லி உட்பட குருகிராமை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லி அரசு அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இப்பிரச்சினையை சமாளிப்பதற்கு தேவையான வழிமுறைகளை டெல்லி அரசு வெளியிடும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் பாரத்நெட் டெண்டரில் முறைகேடு; அதிரடி ரத்து

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.