டெல்லியில் குடியரசு தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் புறப்பட்டனர்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடும் பனியிலும், குளிரிலும் 54வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 9 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும், எந்தவித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஆனால் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஏற்கனவே திட்டமிட்டபடி, டெல்லியில் வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை மிக பிரம்மாண்டமாக நடத்த விவசாயிகள் திட்டமிட்டு, அதற்காக டிராக்டர் பேரணி ஒத்திகையும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் குடியரசு தினத்தன்று நடத்தவிருக்கும் 1 லட்சம் டிராக்டர் பேரணியில் கலந்துகொள்ள பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி எல்லைகளில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘குடியரசு தின பேரணி நடைபெறும் நாளில் டிராக்டர் பேரணி நடத்தி இடையூறு ஏற்படுத்தினால் அது நம் நாட்டுக்கு தர்மசங்கடமாக இருக்கும்’ எனக் கூறி, டிராக்டர் பேரணிக்கு தடைகோரி உள்ளது.

அதேபோல் இந்த டிராக்டர் பேரணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனுவில், குடியரசு தினநாளில் டெல்லியில் எந்த இடத்திலும் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். இந்த மனு மீதான உச்சநீதிமன்றத்தில் நாளை (ஜனவரி 18) விசாரணைக்கு வரவுள்ளது.

டெல்லிக்குள் விவசாயிகளின் டிராக்டர்களை அனுமதிப்பதை காவல்துறைதான் முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே, குடியரசு தின விழாவின் பாதுகாப்பு கருதி, விவசாயிகளின் டிராக்டர்கள் அனைத்தும் டெல்லியின் எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவசாய சங்கங்கள்- மத்திய அரசு இடையே 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி