தமிழகத்தில் பாரத்நெட் டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதால் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அனைத்து கிராமங்களுக்கும் இண்டர்நெட் இணைப்பு வழங்குவதற்காக பாரத்நெட் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, தமிழகத்தில் 12,524 கிராமங்களுக்கு இண்டர்நெட் இணைப்பு வழங்க 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,950 கோடியாகும்.

இத்திட்டத்திற்கான பணிகளை தமிழ்நாடு ஃபைபர்நெட் கழகம் (TANFINET) மேற்கொண்டு வந்தது. அதில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஆதரவாக டெண்டர் விடுவதில் முறைகேடுகள் இருப்பதாக அறப்போர் இயக்கம், திமுக குற்றம்சாட்டி வந்தன.

இதுகுறித்து தமிழக முதல்வர், தலைமை செயலாளர், மத்திய தொலைத்தொடர்பு துறை செயலாளர், உள்நாட்டு தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறை, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் சார்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பாரத் நெட் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும், தமிழ அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உள்நாட்டு தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) தெரிவித்தது. பிரச்சினை தீர்க்கப்படும் வரை திட்டத்திற்கு தேவையான பொருட்களின் கொள்முதலை இறுதிசெய்ய வேண்டாம் எனவும் தமிழக அரசிடம் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், டெண்டர் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி பாரத்நெட் திட்டத்திற்கான டெண்டரை உள்நாட்டு தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறை (மத்திய வர்த்தக அமைச்சகம்) ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், டெண்டரில் உள்ள குறைகளை கண்டறிந்து மீண்டும் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8 வது முறையாக கால அவகாசம்.. ஜெயலலிதா மரண மர்மம் விலகுமா?

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் கூறுகையில், “அறப்போர் இயக்கத்தின் புகாரில் அடிப்படையில் பாரத்நெட் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரும் ஊழலை தடுப்பதில் வெற்றி கண்டுள்ளோம். 2019ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி பாரத்நெட் டெண்டர் தமிழக அரசால் கோரப்பட்டது.

ஆனால், சில நிறுவனங்களுக்கு ஆதரவாக டெண்டரில் விதிமுறைகளை மாற்ற வேண்டுமென ஐடி செயலாளர் சந்தோஷ்பாபு ஐஏஎஸ், TANFINET நிர்வாக இயக்குநர் சண்முகம் ஐஏஎஸ் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர்கள் இருவரும் மறுத்ததால் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

புதிய ஐடி செயலாளராக ஹான்ஸ் ராஜ் வெர்மா ஐஏஎஸ், TANFINET நிர்வாக இயக்குநராக ரவிச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியன்று கொரோனா நெருக்கடிக்கு இடையே சில நிறுவனங்களுக்கு ஆதரவாக டெண்டர் விதிமுறைகளை மாற்றினர்.

பாரத்நெட் டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என கூறிய ஐடி துறை அமைச்சர் உதயகுமார் கூறியது தற்போது பொய்த்துவிட்டது. அமைச்சர் உதயகுமார், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுப்பாரா என்பது பொறுத்து முதல்வர் நிலைப்பாடு தெரிந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.