கோவை சுற்று வட்டாரப் பகுதிகளை கதிகலங்க செய்து வரும் சின்னதம்பி என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோவையில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை சோமையனூரில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி காட்டு யானை கடந்த 25ஆம் தேதி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சின்னத்தம்பி யானை கடந்த இரு தினங்களாக அங்கலக்குறிச்சி, தேவனூர் புதூர் ,சாலையூர், உட்பட கிராமங்களில் சுற்றித் திரிகிறது.

இந்நிலையில் சின்னதம்பி யானையை 50 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சின்னத்தம்பி காட்டுயானை பிடிக்கப்பட்டு கும்கி யானையாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோவையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது என வனஉயிரின ஆர்வலர்கள், கோவை ஆட்சியரிடம் இன்று புகாரளிக்கின்றனர். சின்னதம்பி யானைக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து #savechinnathambi #saveelephants என்ற ஹேஷ்டேக்கை பிரபலபடுத்தி வருகின்றனர். மேலும், கோவை ஆலமரமேடு கொண்டனூர் பிரிவில், மலைவாழ் மக்கள் சார்பில் சின்னதம்பி யானைக்கு ஆதரவாக பிளெக்ஸ் பேனரும் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் டுவிட்டர் பதிவில், “வாழும் உரிமை அந்த யானைக்கும் உள்ளது, தன் சகோதரனை பிரிந்த சோகத்தில் அலைந்து கொண்டிருக்கும் யானையை மேலும் துன்புறுத்துவது போல் அதை கும்கியாகிவோம் என்று அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது, இரு யானைகளை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.