டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதற்கு பாகிஸ்தான் தொழிற்சாலைகள் தான் காரணம் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு கடந்த நான்கு வாரங்களாக விசாரித்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை (2.12.2021) நடைபெற்ற விசாரணையின்போது, டெல்லி என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் குறைக்க 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காற்று தர மேலாண்மை அமைப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (3.12.2021) நடைபெற்ற விசாரணையின்போது, காற்று மாசு தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த மனுதாரர் வாதிடுகையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் கரும்பு ஆலைகள் வெளியிடும் மாசு முக்கிய காரணம் என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உத்தரப் பிரதேச பாஜக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், டெல்லி, என்.சி.ஆர் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள் தான் காரணம். பாகிஸ்தானில் இருந்து வரக் கூடிய காற்று தூசுகளை எடுத்து வருவதால் தான் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. காற்று மாசுக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “நீங்கள் சொல்வதைப் பார்த்தால், பாகிஸ்தானில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்கிறீர்களா..” எனக் கிண்டல் தொனியில் கேள்வி எழுப்பினார்.

மேலும் காற்று மாசு விவகாரத்தை அர்விந்த் கெஜ்ரிவால் அரசு திறம்பட செயல்படவில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்திருந்தார். 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெடு விதித்தார்.

இதனிடையே காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான ஐந்து பேர் கொண்ட சிறப்பு குழு மற்றும் 40-க்கும் மேற்பட்ட அதிரடி கண்காணிப்புப் பிரிவு உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய, மாநில அரசுகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தன.

டெல்லி அரசும், காற்று தர மேலாண்மை அமைப்பும் எடுத்துள்ள நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிட்டபின், அதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தவிர மற்ற கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

முன்னதாக டெல்லியில் அதிகரித்துள்ள காற்றுமாசு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதாக டெல்லியின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால்ராய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.