அமமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

தமிழகத்தில் கடந்த, 2020 ஜனவரி மாதம் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. கடலூர் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களில் கீரப்பாளையம் ஒன்றியத்தில் தான் இந்த குளறுபடி நடந்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் 27- ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

கீரப்பாளையம் ஒன்றியம் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளரும், ஒன்றிய முன்னாள் சேர்மனுமான த.அமுதராணி, தினகரனின் அமமுக வேட்பாளர் கவிதா மற்றும் காஞ்சனா சந்தோஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

அதில், அமுதராணியைவிட குறைந்த வாக்குகள் பெற்ற டிடிவி. தினகரனின் அமமுக வேட்பாளர் கவிதா என்பர் வெற்றிபெற்றதாக அறிவித்தார்கள் தேர்தல் அதிகாரிகள். இதனையடுத்து வேட்பாளர் காஞ்சனா சந்தோஷ்குமார் தேர்தல் வெற்றி மற்றும் பெறப்பட்ட வாக்குகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, திமுக வேட்பாளர் 1172 வாக்குகளும், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளர் 1066 வாக்குகளும், காஞ்சனா 1026 வாக்குகளும் பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் வெளியாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை கேள்விக் குள்ளானதாக பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க: பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாதல் உறுதி- அமைச்சர் தர்மேந்திர பிரதான்