2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில், 4 ஆண்டுகள் தடை செய்யப்பட்டு, தங்கப்பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் 2019ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் இந்தியா சார்பில் 800 மீட்டர் ஓட்டத்தில் (2:02.70) தங்கப் பதக்கம் வென்று ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் கோமதி மாரிமுத்து.

மேலும் வாசிக்க: தமிழக முடிகண்டத்தில் இருந்து வந்து முதல் தங்கத்தை முடி சூடிய கோமதி மாரிமுத்து

அதன் பின்னர் கோமதி மாரிமுத்து முதற்கட்ட சோதனையில் ஊக்கமருந்து உட்கொண்டதாக சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், தற்போது இரண்டாவது கட்ட ஊக்கமருந்து சோதனையிலும் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியகியுள்ளன.

கோமதி மாரிமுத்துவுக்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் அவர் அனபாலிக் ஸ்டீராய்டு நண்ட்ரோலன் எனும் ஊக்கமருந்தை பயன்படுத்தியது உறுதிபடுத்தப்பட்டது. அவரிடம் எடுக்கப்பட்ட பி மாதிரிகளிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோமதி மாரிமுத்து கடந்த ஆண்டு மார்ச் 18 முதல் மே 17 வரை பங்கேற்ற அனைத்து போட்டிகளின் முடிவுகளையும் ரத்து செய்துள்ளது ஏஐயு. அவர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பெற்ற தங்கப் பதக்கம் திரும்பப் பெறப்படுகிறது. அதே போல, தமிழக அரசு சார்பில் பெற்ற பதக்கங்கள், பண முடிப்பு ஆகியவற்றையும் திரும்பப் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கோமதி மாரிமுத்து, ஏஐயு விதித்த இந்த தடைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிப்பா… குழப்பத்தில் மக்கள்