23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.
 
இதன்மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை கோமதி மாரிமுத்து பெற்றுத்தந்துள்ளார்.
 
ஆரம்பத்தில் கோமதி சற்று பின் தங்கி இருந்தார். பின்னர் தனது அபார ஓட்டத்தினால் சீன வீராங்கனை வாங் சுன்யு வை தோற்கடித்தார்.
 
இதுகுறித்து கோமதி மாரிமுத்து கூறுகையில், “நான் முடிவு கோட்டை முதலாவதாக கடந்து தங்கப்பதக்கம் வென்று விட்டேன் என்பதை என்னால் உணர முடியவில்லை.
 
கடைசி 150 மீட்டர் தூரம் மிகவும் கடினமாக இருந்தது” என தெரிவித்தார். ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது  .
 
மேலும் 2013/ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 7-வது இடத்தையும் 2015-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 4-வது இடத்தையும் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி.
 
பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது இவரது கிராமம்.
 
குறிப்பாக, இந்தக் கிராமத்தில் ஒரு விளையாட்டு மைதானம் கூட கிடையாது. பேருந்து வசதிகள் குறைவுதான்.
 
அப்படி இருந்தும் தனது வீட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு தினமும் சென்று பயிற்சி செய்துள்ளார் தங்க பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்து
 
இளநிலை வணிகவியல் படித்துள்ள கோமதி, சிறுவயது முதலே தடகளத்தின்மீது தீராத காதல் கொண்டுள்ளார். கல்லூரி காலங்கள் வரை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.
 
2013 முதல் சர்வதேச போட்டிகளில் கோமதி பங்கேற்று வந்தார். இதற்கிடையே அவரின் தந்தை மாரிமுத்து, 2016-ம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். அடுத்த சில மாதங்களில், கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து பக்கபலமாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
 
இருப்பினும், தனது விடா முயற்சியால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் கோமதி. தற்போது அவர் பெங்களூரு வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார்.
மகளின் தங்கபத்க்கம் குறித்து கோமதியின் தாய் ராசாத்தி பேசுகையில் , “என் மகள் வென்றதே எனக்கு தெரியாமல் இருந்தது. எனக்கு டிவி எல்லாம் போட்டு பார்க்கத்தெரியாது. நான் வேலை செய்துகொண்டிருந்தபோது எனது உறவினர்களின் குழந்தைகள், என்ன அத்தை டிவி பார்க்கலயா ? கோமதி ஓடி ஜெயிச்சுட்டாங்க.. அப்புடினு சொன்னாங்க. பின்னர் எனது உறவினர்களும் அதனை என்னிடம் சொன்னார்கள்’ என்று கூறிய விடியோ பதிவு வைரலாகி வருகிறது