திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேற்றும் இன்றும் கோயிலின் நடை மூடப்பட்டது.

பொதுமுடக்கம் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 80 நாட்களாக சாமி தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பொதுமுடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டததை அடுத்து தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோர் இம்மாதம் 8ம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி, கடந்த 8,9,10 ஆகிய தேதிகளில் மட்டும் மொத்தம் 21,500 பேர் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக, ஜூன்.11 (வியாழக்கிழமை) முதல் அனைத்து பொதுமக்களும் வழக்கம்போல் ஏழுமலையானை வழிபடும் வகையில், நாளொன்றுக்கு மூன்றாயிரம் பேர் என்ற கணக்கில் ஆன்லைனில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

மேலும் வாசிக்க: திருப்பதி கோவில் சொத்துக்களை விற்க கூடாது.. ஆந்திர மாநில அரசு உத்தரவு

மேலும், திருப்பதியில் உள்ள சர்வ தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு மூன்றாயிரம் என்ற கணக்கில் இலவச தரிசனம் டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சாமி கோவிலில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கோயிலின் நடை சாற்றப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள ஆந்திர சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால் ஜூன் 12,13 இரு நாட்கள் கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டபின், ஞாயிற்றுக்கிழமை முதல் கோயில் மீண்டும் திறப்பது தொடர்பாக, ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.