ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கக்கூடிய வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தின் போது ஏராளமான ஊர்களுக்கான தமிழ்ப்பெயர்கள் ஆங்கில மொழி எழுத்துகளால் குறிக்கப்பட்டன.

குறிப்பாக, எழும்பூர்-எக்மோர் என்றும், திருவல்லிக்கேணி-ட்ரிப்ளிகேன் என்றும், வண்ணாரப்பேட்டை-வாஷர்மேன்பேட் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கக்கூடிய வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழை போன்று ஆங்கிலத்திலும் எழுத, உச்சரிக்க வேண்டும். தமிழகத்தில் எழும்பூர் என்று இருப்பதை ஆங்கிலத்தில் எக்மோர் என அழைக்கப்பட்டு வருகிறது. இனிமேல் தமிழை போன்று ஆங்கிலத்திலும் எழும்பூர் என்றே அழைக்க வேண்டும்.

இதுபோல் தமிழகத்தில் உள்ள மொத்தம் 1,018 பகுதிகளின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புபடி ஆங்கிலத்திலும் அமையுமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை தற்போது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இப்படி பெயர்களை மாற்றம் செய்வது தேவையா என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க: கொரோனா வைரஸ் பரிசோதனை செய்பவர்களுக்கு புது கட்டுப்பாடுகள் விதித்த சென்னை மாநகராட்சி

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, முக்கியமாக மக்களின் வசதியை அரசு கருத்தில் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் அனைத்து ஊர் பெயர்களும் ஆங்கிலத்தில் தெரிந்தவர்களே கூட எழுத தடுமாறுவார்கள். அப்படி இருக்கையில் சாதாரண மக்கள் ஆங்கில பெயர்களை படிக்க அதிகம் கஷ்டப்படுவார்கள். இதனால் அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு, பெயர்களை எளிமைப்படுத்தி இருக்கிறார்கள்.

இதன் மூலம் அரசு பணியாளர்களும் குழப்பத்தை தவிர்க்க முடியும் . அதாவது அரசு ஆவணங்களில் சரியான வகையில் ஆங்கிலத்தில் ஊர் பெயர்களை எழுத முடியும். உச்சரிப்பிற்கு ஏற்றபடி பெயர்கள் இருந்தால், எளிதாக அதை எழுத முடியும். அரசு பணிகள் எளிமையாக நடக்கும் என்றும் விளக்கமளித்துள்ளது.