ஜூனியருக்கான உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி, பெல்ஜியம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியருக்கான உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (1.12.2021) நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஐரோப்பாவின் மிகவும் வலுவான அணியான பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில், 21வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில், இந்திய வீரர் சர்தானந்த் திவாரி கோல் அடித்து அசத்தினார். அதன் பின்னர் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே, இந்தியா 1-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

2016ல் லக்னோவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது, இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணியை இந்தியா 2-1 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த முறையும் பெல்ஜியம் அணியை வீழ்த்தி உள்ளது.

இந்நிலையில் நாளை (3.12.2021) நடைபெற உள்ள அரை இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியுடன் இந்தியா மோத உள்ளது. 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி, காலிறுதியில் 3-1 என ஸ்பெயின் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது.