ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தீவிரமானதால், பறவை காய்ச்சலை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்த வாத்துகளை பரிசோதித்ததில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. பறவை காய்ச்சலால் இதுவரை 12,000க்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்துள்ளன. இந்த நோய் இன்புளூயன்ஸா-ஏ வகை வைரஸால் ஏற்படுகிறது.

வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் H5N8 வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இவை மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. இருப்பினும் இதுவரை மனிதர்களுக்கு பரவவில்லை என கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மேலும் போபாலில் செயல்படும் பறவை நோய்கள் ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகள் அனுப்பி, பறவை காய்ச்சலின் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் 1 கி.மீ சுற்றளவில் கோழிகள், வாத்துகள், அலங்கார பறவைகள் உள்பட 36 ஆயிரம் பறவைகள் கொல்லப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராஜூ கூறுகையில், நோய் அறியப்பட்ட பகுதியில் பறவைப் பண்ணை வைத்திருப்பவர்கள், வளர்ப்பு பறவைகளை அழித்து நோய்ப்பரவலை தடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.

[su_image_carousel source=”media: 21060,21061″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இதற்கு முன்பு, கேரளாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பறவைக் காய்ச்சல் பரவியது குறிப்பிடத்தக்கது. கேராளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக, அம்மாநிலத்தில் இருந்து கோழி, வாத்து போன்ற பறவைகளை தமிழகத்திற்குள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பறவை காய்ச்சல் இரு மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் கோழிப்பண்ணைகளை தொடர்ந்து கண்காணிக்கும்படி கூறி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும் கேரளாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவையினங்கள், முட்டை, கோழி தீவனம் மற்றும் பறவையின வளர்ப்பிடங்களில் பயன்படுத்தப்படும் உரங்கள் போன்றவற்றை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தம்; உச்சநீதிமன்றம் எச்சரிக்கை