மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வரை மிரட்டும் தோரணையில், தமிழகத்தில் பாஜ தலைமையில்தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அமித்ஷா பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா, கடந்த 22ம் தேதி ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்திருந்தார். விமானநிலையத்தில், அமித்ஷாவை பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்த வீடியோ தற்போது ஆடியோவுடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதில் அதிகார தோரனையுடன் ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து அமித்ஷா பேசிய விவரம் வருமாறு ” தமிழகத்தில் பாஜவுக்கு மிகக் குறைவான தொகுதிகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக, பாமக கட்சிகள் இருக்கின்றன.
 
ஆதலால், அதிமுக தலைமையிலான கூட்டணி என்று அழைக்கக் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்தார். மேலும், ‘கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடி, மதுரை வந்தபோது நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில், எந்த மாதிரி ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டதோ, அதேமாதிரி கன்னியாகுமரியில் மார்ச் 1ம் ேததி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியும் நடக்க வேண்டும்’ என்று தமிழிசை, ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினார்.
 
அப்போது அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வத்திடம் ‘எத்தனை மக்கள், கன்னியாகுமரியில் கூடுவார்கள்’ என்று கேட்டார். அதற்கு அவர் தயங்கி தயங்கி , ‘2 லட்சம் பேர் வருவார்கள்’ என்றார்.
 
இதற்கிடையே பாஜ நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன், ‘கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கலாமா, அழைக்கலாமா’ என்று கேட்டார்.
 
அதற்கு அமித்ஷா, ‘‘கண்டிப்பாக முதல்வர், துணை முதல்வர், மாநில அமைச்சர்கள், உள்ளூர் எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆகியோரும் பங்கேற்க வேண்டும்.
 
இப்போதில் இருந்தே தமிழகத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிகழ்ச்சியாகவே இருக்கும்” என்றார். அப்போது அங்கிருந்த தமிழிசை சவுந்தரராஜன், இதை தமிழில் அனைத்து தலைவர்களுக்கும் தெரிவித்தார்.
 
இதை நையாண்டியுடன் சிரித்துக் கொண்டே தமிழிசை சொல்வதும், தலைவர்களுக்கு இடையிலான உரையாடல் வீடியோ வைரலாகி வருகிறது.
 
இங்கிருக்கும் அதிமுக தலைவர்கள், அதிமுக தலைமையில் பாஜ, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன என்று கூறிவரும் நிலையில், பாஜ தலைவர் அமித்ஷாவோ, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தான், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளதாக தெரிவித்ததால், கூட்டணியில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.மேலும் பாஜக தலைவர்கள் அமர்ந்த நிலையில் அதிமுகவினரை அமித்ஷா நிற்க வைத்து பேசியது அதிமுக தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.