சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் செயல்படும் ஈஷா யோகா அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடங்கள் போலாம்பட்டி வனச்சரகத்தில் யானைகள் பயன்படுத்திவரும் வழித்தடத்தில் அமைந்துள்ளதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் 2006 முதல் 2014 ஆம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டதாக கூறி ஈஷா அறக்கட்டளை மீது நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அளித்தது.

இதை எதிர்த்து ஈஷா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (11.1.2022) நீதிபதிகள் முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின்போது, 2014 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவிப்பாணைபடி, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கல்வி பயன்பாட்டு கட்டடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்து ஈஷா அறக்கட்டளை விலக்கு பெற்றுள்ளது என்று ஈஷா தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.