நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன், ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகளும், நடிகை நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டினார்.

காயத்ரி ரகுராம் தமிழ்நாடு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு மோதல் போக்கு நிலவ தொடங்கியது.

சமீபத்தில் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி பாஜகவில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாக ஹனி டிராப் குறித்து ஊடகங்களில் பேசப்படுகிறது. இது பெண்களுக்கு மிக அபாயகரமான விஷயம் என்றும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது. இதனையடுத்து பாஜகவில் இருந்து நீக்கி என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி என காயத்ரி ரகுராம் அறிக்கை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆபாசம் பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர்.

என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி. நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். விரைவில் களத்தில் சந்திப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து பெண்களை அவமானப்படுத்தியதற்கும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காததற்கும் பாஜகவை கண்டித்து வரும் ஜனவரி 27 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார். மேலும் பாஜக.வுக்கு எதிராக நடத்தப்படும் இந்த நடைப்பயணத்தை என் உயிர் போனாலும் நடத்திக்காட்டுவேன் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிடத் தயாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா?

நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.