நாடு முழுவதும் இதுவரை 11,700 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கருப்பு பூஞ்சை சிகிச்சையில் அளிக்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்தை மாத்திரையாக ஹைதராபாத் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனாவை தொடர்ந்து கருப்பு பூஞ்சை தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த நோயாளிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பை கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்றுக்கு அளிக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த பாதிப்பு வருவதாகவும் கூறப்படுகிறது.
பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நோயை அனைத்து மாநில அரசுகளும் பெருந்தொற்றாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.
நாடு முழுவதும் கடந்த 25 ஆம் தேதி நிலவரப்படி 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 2,859 பேருக்கும், மராட்டியத்தில் 2,770 பேருக்கும் இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் 766 பேர், மத்திய பிரதேசத்தில் 752 பேர், தெலுங்கானாவில் 744 பேர், உத்தரபிரதேசத்தில் 701 பேர், ராஜஸ்தானில் 492 பேர், கர்நாடகாவில் 481 பேர், ஹரியானாவில் 436 பேர், தமிழ்நாட்டில் 236 பேர் மற்றும் பீகாரில் 215 பேருக்கும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு மருந்துகள் இல்லை. மியூகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சையில் ஆம்போடெரிசின் பி என்ற மருந்து அளிக்கப்படுகிறது. இந்த மருந்து இந்தியாவில் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கருப்பு பூஞ்சை சிகிச்சையில் அளிக்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்தை மாத்திரையாக ஹைதராபாத் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வேதியியல் பொறியியல் துறையைச் சேர்ந்த சப்தர்ஜி மஜும்தார், சந்திரசேகர்சர்மா ஆகியோர் ஆம்போடெரிசின் பி மருந்தை மாத்திரையாக செலுத்துவது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தினர். இதில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆம்போடெரிசின் பி மாத்திரை 60 எம்.ஜி. ரூ.200க்கு கிடைக்கும்.
இதுகுறித்து ஹைதராபாத் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பேசும்போது, பூஞ்சை நோய்க்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளில் கிடைக்கும் தன்மை, மலிவு விலை மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றுக்கு பதிலாக இந்த வாய்வழி மருந்து அவசர மற்றும் உடனடி சோதனைக்கு அனுமதிக்க வேண்டியது அவசியம் என்று நாங்கள் உணருகிறோம்.
2 ஆண்டுகள் நடத்திய ஆய்வின் முன்னேற்றத்துடன் இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவிலான உற்பத்திக்கு பார்மா நிறுவனங்களுக்கு வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் மாத்திரை பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம். மேலும் இது மலிவு விலையிலும் பெருமளவிலும் பொதுமக்களுக்கு கிடைக்கும். இது நோயாளிகளுக்கு மிகவும் பயன் அளிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை எந்த முதல்வரும் செய்யாத காரியம்; ட்ரெண்டிங்கில் #WeStandWithStalin