ஏழை மாணவ, மாணவியருக்கு இலவசமாக லேப்டாப் வழங்குவது அரசின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம்,

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவியர் ஆன்லைனில் கல்வி பயில தேவையான டிஜிட்டல் கருவிகளை டெல்லி அரசு, பள்ளி நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம்நாத், நாகரத்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பேசும்போது, “கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் வீட்டு வேலை செய்யும் பெண்கள், வாடகை ஓட்டுநரின் பிள்ளைகள் கூட நல்ல பள்ளிகளில் சேர முடியும். ஆனால் அந்த பெற்றோரால் தங்கள் குழந்தைகளுக்கு லேப்டாப் வாங்கிக் கொடுக்க முடியுமா?

தலைநகர் டெல்லி வளர்ச்சி அடைந்த பகுதியாகும். இங்கே ஏழை மாணவ, மாணவியரின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. கிராமங்கள், பழங்குடியினர் பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.

ஏழை மாணவ, மாணவியருக்கு இலவசமாக லேப்டாப் அல்லது தேவையான டிஜிட்டல் கருவிகளை வழங்குவது அரசின் கடமை ஆகும். இந்த பிரச்சினைக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.