வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தடகள பயிற்சியாளர் நாகராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜூன் 11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் வரதாச்சாரி கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தமிழகத்தில் மாணவ-மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால், தைரியமாக காவல்துறையில் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். மேலும் பாலியல் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பாலியல் தொல்லைக்குள்ளான மாணவிகள் பலரும் துணிந்து புகார் கூறி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை பாரிமுனையில் பிரைம் ஸ்போர்ட் அகாடமி என்ற தடகள பயிற்சி நிறுவனத்தை நடத்தி வந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது பெண்ணுக்கு அவரது பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த பாலியல் தொல்லைகளை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் டபிள்யூ 10 பூக்கடை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நந்தனத்தை சேர்ந்த நாகராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போக்சோ நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட பயிற்சியாளர் நாகராஜனை ஜூன் 11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக நாகராஜனை கைது செய்ய நேற்று இரவு அவரது வீட்டிற்கு மகளிர் காவல்துறையினர் சென்ற போது அவர் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

PSBB ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்கள்; விசாரணையில் சிக்கிய மேலும் 3 ஆசிரியர்கள்