சென்னையில் இன்று (அக்டோபர் 03) பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து, 100.01 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் சதத்தை எட்டி உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு அமைந்தபிறகு, பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து இந்தியாவில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு கடந்த சில மாதங்களாக 100 ரூபாயை தாண்டி உள்ளது.

இருப்பினும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.100க்கு குறைவாக இருந்து வந்தது. நேற்று (02.10.2021) நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 95.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது எண்ணெய் நிறுவனங்களின் தொடர் விலை ஏற்றத்தால் மீண்டும் இதன் விலை ரூ. 100ஐ கடந்து உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து 100.01 ரூபாய்க்கும், டீசல் விலையில் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 95.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று (03.10.2021) காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

தற்போது டெல்லியில் பெட்ரோல் 102.39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் 90.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை 105.97 ரூபாய்க்கும், டீசல் விலை 96.36 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

மேலும் ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 103.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 97.89 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 108.51 ரூபாய்க்கும், டீசல் விலை 98.53 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கும் பெரு நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது குறிப்பிடத்தக்கது.

காட்டுத்தீ போல் பரவிய வதந்தி- திடீரென 5 ரூபாய் பார்லே-ஜி பிஸ்கட் ரூ.50க்கு விற்பனை