வடகிழக்குப் பருவமழை கடந்த 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு நவம்பரில் அதிகமாக கொட்டித்தீர்த்த நிலையில், டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக 132 சதவீதத்திற்கு மேல் மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடப்பு ஆண்டு வடகிழக்குப் பருவமழை அதிகமாகவே பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அக்டோபரில் ஆரம்பித்த மழை நவம்பர் மாதத்தில் அபரிமிதமாக கொட்டித்தீர்த்தது. இதனால், தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு நவம்பர் மாதத்தின் மிக அதிக மழை பதிவாக இது கருதப்படுகிறது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பரில் மிக கனமழை பதிவாகி உள்ளது.

மேலும் நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதத்தில் 11 அதிதீவிர கனமழை பொழிவுகளும், 168 மிக கன மழை பொழிவுகளும், 645 கன மழை பொழிவுகளும் பதிவாகியுள்ளது. அதி கனமழை காரணமாக தென்னிந்தியா மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில், நவம்பர் மாதத்தில் இயல்பான மழை அளவான 8.95 சென்டிமீட்டரை விட 160 சதவிகிதம் அதிகமாக 23.27 சென்டிமீட்டர் மழை இந்த ஆண்டு பதிவாகி உள்ளது. குறிப்பாக 20 சென்டிமீட்டருக்கு அதிகமாக 11 மிக அதி கனமழைப்பொழிவுகள் இருந்ததாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாதத்திற்கான நீண்டகால முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் ஆந்திர பிரதேச கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமாக 132 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரத்தில் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மழை இயல்பை விட குறைவாக இருக்கும். வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வானிலை நிலவரப்படி கடலின் வெப்பநிலை, IOD எனும் இந்திய பெருங்கடலின் இரு துருவங்களும் தமிழ்நாட்டிற்கு மழை தரக்கூடிய சாதகமான நிலையில் உள்ளதால், டிசம்பர் மாதம் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கொட்டித்தீர்த்த மழையால் அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்னும் பல பெருமழைகளை எப்படி சமாளிப்பார்கள் என்ற கவலை எழுந்துள்ளது.