ஓமைக்ரான் வைரஸ் உருமாற்றம் அடைந்து தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று முதல் கட்ட ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது. தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வேக்சின் பணிகளால் தீவிர வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் கூட குறைந்தது. இதனால் கொரோனாவின் மோசமான நிலை முடிந்துவிட்டதாகவே பல ஆய்வாளர்களும் கருதினர்.

இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி முதல் முறையாக ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வகை வைரஸ் பரவி உள்ளது.

உலக சுகாதார அமைப்பால் கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியலிட்டுள்ள ஓமைக்ரான் வைரஸ், இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகள் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும்.

ஓமைக்ரான் கொரோனாவில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாகவும், இதுவரை எந்த உருமாறிய கொரோனா வைரசிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், “தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்ற பிரிவான ஓமைக்ரான் வைரஸ் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் 4 அல்லது 5 மண்டலங்களில் காணப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளே ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பையும் கட்டுப்படுத்தும். ஓமைக்ரான் மற்ற நாடுகளுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தங்கள் பொதுச் சுகாதார கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், பொதுமக்களிடையே கொரோனா வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மேலும். கொரோனாவால் மோசமாகவும் எளிதாகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு உடனடியாக 2 டோஸ் வேக்சின் போடப்படுவதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.

சர்வதேச நாடுகளின் கவனம் தற்போது ஓமைக்ரான் உருமாறிய கொரோனா பக்கம் திரும்பியுள்ளது. உலகில் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே 2 டோஸ் வேக்சின் பணிகள் முடிந்து பூஸ்டர் டோஸ் பணிகளை தொடங்கி உள்ளன. ஆனால், சில நாடுகளில் வேக்சின் பணிகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.

இப்படிக் குறைந்த வேகத்தில் நடைபெறும் வேக்சின் பணிகள் மற்றும் குறைவான கொரோனா பரிசோதனைகள் காரணமாக புது புது உருமாறிய கொரோனா வைரஸ்கள் தோன்றும் அபாயம் உள்ளது. எனவே அனைத்து நாடுகளிலும் வேக்சின் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்று எச்சரித்துள்ளார்.

முன்னதாக ஓமைக்ரான் வைரஸ் குறித்த முதல்கட்டத் தொழில்நுட்ப ஆய்வறிக்கையை அதன் உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், “ஓமைக்ரான் வைரஸ் குறித்து கணிசமான நிச்சயமற்ற தன்மைகள் காணப்படுகின்றன.

அதிகமான உருமாற்றம் அடையும் தன்மை கொண்ட ஓமைக்ரான் வைரஸால், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து எளிதாகத் தப்பிக்க முடியும். ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு அதிவேகமாகப் பரவக்கூடிய தன்மையைப் பெறும்.

இந்த வைரஸின் குணங்களின் அடிப்படையில், எதிர்கலாத்தில் இதன் பரவல் வேகம் இருக்கும். உருவாகும் இடம், சூழல் ஆகியவற்றைப் பொறுத்தும், பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்தும் தீவிரமான விளைவுகளை ஓமைக்ரான் ஏற்படுத்தக்கூடும். உலக அளவில் ஒமைக்ரான் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தல், ஆபத்து என்பது அதிகமாகவே இருக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் ஆபத்தானதாக இருக்கும் என அஞ்சினால், தடுப்பூசி குறைவாகச் செலுத்தியுள்ள நாடுகளில் உள்ள மக்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.