புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடைவிதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ள நிலையில், அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
புதுச்சேரியில், இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
 
அதில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, புதுச்சேரியில் மார்ச் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அமைச்சரவை கூட்டம் எடுத்த முடிவை அறிவித்துள்ளார்.
 
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரியில் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.