அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது தமிழ்நாடு அரசு.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்கு தடை கோரியும் சூரப்பா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்ற உத்தரவின்படி, நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில், சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். அதற்காக ஆணைய அறிக்கை, ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 3 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.