மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாகவும், 4 தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. தற்போது அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர், அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கி கொடுப்பதாக ரூ.30 லட்சம் பணம் வாங்கியதாகக் கூறியிருந்தார்.இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்பட மூவர் மீதும் கடந்த நவம்பர் 18 அம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் வெம்பக்கோட்டை அதிமுக மேற்கு ஒன்றியச் செயலரும் முன்னாள் சபாநயாகர் காளிமுத்துவின் கடைசி தம்பியுமான விஜய் நல்லதம்பி என்பவர் கொடுத்த புகாரில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் ரூ.1.60 கோடி பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் அண்ணன் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
மேலும், கட்சிக் கூட்டங்கள் நடத்தியற்காக நான் செலவு செய்த ரூ.1.50 கோடி வரை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எனக்குக் கொடுக்க வேண்டும். இவ்வாறு மொத்தம் சுமார் ரூ.3 கோடி வரை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தன்னை ஏமாற்றியதாகவும் விஜய் நல்லதம்பி புகார் அளித்தார்.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பலராமன், பாபுராஜ் மற்றும் முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இன்று (17.12.2021) இந்த மனு மீதான விசாரணையில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
இதற்கிடையே, இன்று காலை விருதுநகர் மாவட்ட மைய நூலகம் அருகே தமிழக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் வந்ததும், உடனடியாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அங்கிருந்து காரில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். இதனால், அதிமுகவினர் பரபரப்பு அடைந்தனர்.
மோசடி வழக்கில் தான் கைதுசெய்யப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 4 தனிப்படைகள் அமைத்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்தி ரபாலாஜியைத் மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.