12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது.

இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்வதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்தன. மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சிபிஎஸ்இ மற்றும் மாநிலங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த முறை விசாரணையின்போது, 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வுசெய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிஎஸ்இ தாக்கல் செய்த மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் முறையைத் தனது இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. மாணவர்களுக்குத் தனி குறை தீர்க்கும் மையம் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சிபிஎஸ்இ வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடும் முறையை அடுத்த 10 நாளில் மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை மாநில அரசுகள் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

லட்சத்தீவில் ஒன்றிய அரசின் நிர்வாகி பிறப்பித்த உத்தரவுக்கு தடை- கேரள உயர்நீதிமன்றம்