Godman வெப்சீரிஸ்க்கு எதிராக கருத்துக்கூறியதாக திரௌபதி பட இயக்குனருக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் களமிறங்கியுள்ளனர்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அவரது இயக்கத்தில் வெளியான திரௌபதி படம் நாடகக் காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்ததால் பல்வேறு விமர்சனக்குள்ளானது. .

அதே நேரத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியானது முதலே சிலர் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு எதிர்ப்புகளை மீறி படம் வெளியாது. குறிப்பிட்ட சமூகம் சார்ந்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தன.

திரௌபதி படத்திற்கு பிறகு இயக்குனர் மோகன் ஜி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்களை தெரிவித்து, சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் வாசிக்க: ‘GodMan’ பதற்றத்தில் பதறும் பாஜக நடிகர்

அந்த வகையில் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக தனது ட்வீட்டர் பதிவில், “காட்மேன் சீரியசை தடை செய்ததில் எந்த தவறும் இல்லை. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை இழிவாக பேசுவதை இன்று ஆதரிக்க துடிப்பவர்கள் நாளை தான் சார்ந்த சமுதாயத்தை விமர்சித்து யாராவது தயாரித்தால் என்ன மனநிலையில் இருப்பார்கள். படைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர வன்மத்தை அல்ல..” என கூறியுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் திரௌபதி போன்ற ஒரு சாதிய படத்தை கொடுத்துவிட்டு நீங்கள் எல்லாம் இதைப் பற்றி பேசவேக்கூடாது என்றும், உங்களின் திரௌபதி படத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள் என்றும் என்று இயக்குனர் மோகனை குற்றம் சாட்டியுள்ளனர். ,

இன்னும் சிலர் உங்களின் கருத்துப்படி பார்த்தால் திரௌபதி படத்தையும் தடை செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், ‘படைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர வன்மத்தை அல்ல’ என உங்களால் எப்படி எழுத முடிந்தது என்றும் விளாசியிருக்கின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.