வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “அசுரன்” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் விவேக்ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில், “இப்படத்தில் தனுஷ் அப்பா மற்றும் மகன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருவதாகவும், இதில் அப்பா கேரக்டரில் தனுஷின் வயது 45 என்றும், இப்படத்தில் தனுஷ், இரண்டு அசுரன்களாக தெரிவார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், படப்பிடிப்பில் ஒரு மலையேறும் காட்சியில் மலையேறி, இறங்க 6 மணி நேரம் ஆகியும் எந்தவித சலிப்பும் இன்றி தனுஷ் நடித்ததாகவும், அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு படத்திலும் அவர் தன்னை நடிப்பால் ஆச்சரியப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் மஞ்சுவாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல் ஆகியோர், தான் எதிர்பார்த்ததைவிட நல்ல ஒத்துழைப்பையும் அபார நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வருவதால் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்” எனக் கூறினார்.

அசுரன் படம் வெக்கை என்ற நாவலை மையப்படுத்தி உருவாகி வருவதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படம் லாக்கப் என்ற நாவலின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது