‘என்ன சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியனுங்களா இருக்காணுங்க, இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்கணும்னு நான் காட்ட போறேன்’ என்ற சர்ச்சைக்குரிய வசனங்களுடன் வெளியான காட்மேன் வெப்சீரியஸ் டீசர் சர்ச்சையானதை அடுத்து, பாஜக உட்பட பல்வேறு அமைப்புகளும் வெப்சீரியஸை தடை செய்ய வலியுறுத்தியுள்ளன.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல்வேறு புதிய படங்கள் மற்றும் வெப் சீரியஸ் போன்றவை OTT தளத்தில் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் சமீபத்தில் ஜி5 நிறுவனம் மே 26ம் தேதி வெளியிட்ட காட்மேன் என்ற வெப்சீரியஸின் டீசர் வெளியாகி சர்ச்சையானது. இதில் நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் போன்றோர் நடித்துள்ளனர். இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இளங்கோ ரகுபதி மற்றும் பெதர்ஸ் இதனை தயாரித்துள்ளனர்.

டீசர் தொடங்கும் போதே, ‘பிராமணாள் மட்டும் தான் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்திரத்துல சொல்லி இருக்கு’ என்று தொடங்கி, காவி உடையில் சாமியாராக வரும் ஜெயபிரகாஷ், ‘என்ன சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியனுங்களா இருக்காணுங்க’ என்ற வசனம் அனல் தெறிக்கிறது. மேலும்,’நீ வேதம் படிக்கணும் அய்யனார்’ என்ற வசனம், ‘இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்கனும்னு காட்ட போறேன்’ வசனமும் வைரலாகியது.

இன்னொரு காட்சியில் நடிகர் டேனியல் பாலாஜி மது அருந்துவது மற்றும் பெண்களுடன் இருப்பது போன்ற எல்லா தவறான செயல்களையும் செய்து கொண்டிருக்கும் ஒருவராக நடித்திருக்கிறார். டிஸர் வெளியான சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சர்ச்சை அதிகரிக்க துவங்கியதை அடுத்து அந்த டீஸரை ஜி5 நிறுவனம் நீக்கியது. ஆனாலும் அந்த படித்தில் நடித்திருக்கும் டேனியல் பாலாஜிக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் டேனியல் பாலாஜி அளித்த பேட்டி ஒன்றில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக போன் செய்து, கிறிஸ்துவனாக இருக்கும் நீ எப்படி எங்கள் சமூகத்தை இழிவுப்படுத்தலாம் எனக் கூறி தன்னைப்பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் ஆபாச வார்த்தைகளாலும், மோசமான முறையில் திட்டி மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் முதலில் தான் ஒரு கிறிஸ்தவன் அல்ல; அது சித்தி நாடகத்தில் தனது கதாபாத்திரத்தின் பெயர் டேனியல் என்றும் அது பின்னர் வழக்கமாகி தனது பெயரான பாலாஜியுடன் ஒட்டிக் கொண்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் ஒரு படத்திற்காக இதுபோல நடக்கும் தாக்குதலுக்கு பின்னணியில் சில அமைப்புகள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமின்றி, படத்தின் 2 நிமிட டீசரை வைத்து, குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான தொடர் என்ற முடிவுக்கு வருவது தவறு என்றும் டேனியல் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக paatal lok வெப் சீரியஸுக்கு எதிராகவும் சர்ச்சை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: அனுஷ்கா சர்மாவை விவகாரத்து செய்ய விராட் கோலிக்கு அட்வைஸ் செய்த பாஜக எம்எல்ஏ

இந்நிலையில் இந்து மதத்தையும், பிராமணர் சமூகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, ‘காட்மேன்’ வெப் சீரியலுக்கு, மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும். தொடரை தயாரித்தவர்கள், அதன் டீசரை வெளியிட்ட, ஜி டிவி நிர்வாகிகள், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

காட்மேன் தொடரை தடை செய்ய வேண்டும் என்று நடிகரும் பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் நடித்த ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி, இணை இயக்குனர் ராஜா முகமது, நிர்வாக தயாரிப்பாளர் சுகுமாரன் மற்றும் ஜீ5 சிஇஓ தருண் கதியால் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 153 (A), 504, 505, தொழில்நுட்ப பிரிவு சட்டம் 2000 ன் 67 ஆகிய பிரிவுகளின் கீழ கைது செய்து, காட்மென் தொடரை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.