சென்னையில் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. சென்னையடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வரும் 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது.

இதில் 188 வெளிநாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதில் 7 மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 198 மருத்துவர்கள் 74 செவிலியர்கள் உட்பட 433 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வரும் 24 ஆம் தேதி தமிழக சதுரங்க வீரர்களை கொண்டு மாமல்லபுரத்தில் பயிற்சிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனைத்தொடர்ந்து 28 ஆம் தேதி தொடக்க விழா பிரதமர் மோடி முன்னிலையில் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் 2, 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. வீரர்கள் அரங்கத்துக்கு வந்து செல்லும் நேரங்களில் மட்டும் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் சிறியளவில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நேற்று (22.07.2022) அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 28 ஆம் தேதி தொடக்க விழாவுக்கான ஏற்பாடு, வீரர்கள் தங்கும் இட வசதி உள்ளிட்டவை குறித்து விவாதித்தார். இதில் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் போட்டியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குறைபாடின்றி ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.