சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் தரமற்று இருப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் 2 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் ரூ.112 கோடியே 60 லட்சம் செலவில் கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மொத்தம் 864 வீடுகள் உள்ளன.

சமீபத்தில் இந்த குடியிருப்பின் கட்டிடத்தை தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதும், உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருக்கின்றன என்பது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து கட்டடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் பலவீனமாக மோசமான நிலையில் இருப்பதாக கூறிய குடியிருப்புவாசிகள் கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இந்த தரமற்ற குடியிருப்பு விவகாரம் தொடர்பான பிரச்சனை சட்டசபையிலுல் எதிரொலித்தது. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

[su_image_carousel source=”media: 25801,25802″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த விவாகரம் தொடர்பாக முழுமையாக விசாரிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்பு கட்டிடத்தை குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரரோ, அதிகாரிகளோ யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டசபையில் உறுதி அளித்தார்.

இதற்கிடையே அவல நிலைக்கு உள்ளான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகினறன. இந்நிலையில் முதற்கட்டமாக கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆராயாமல் அனுமதி வழங்கிய உதவி பொறியாளர்கள் பாண்டியன், அன்பழகன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கட்டுமானத்தின் உறுதித்தன்மை குறித்து தரத்தை ஐஐடி சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு குழுவினரின் ஆய்வறிக்கையை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்