திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுவது தேசிய திரைப்பட விருதுகள். 1954 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதொறும் வழங்கப்பட்டுவரும் இவ்விருதுகள், சிறந்த இயக்குனர், படம், நடிகர், நடிகை, துணை நடிகர் போன்ற பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக தேசிய விருதுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31 வரை வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று (22.07.2022) அறிவிக்கப்பட்டன.

305 திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், அவற்றில் 150 படங்கள் திரைப்படம் இல்லாத பிரிவுகளில் போட்டியிட்டன. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த படம், நடிகர், நடிகை, பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை குவித்துள்ளது.

இதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்கரா இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பியூச்சர் ஃபிலிம் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தேசிய விருது வென்றுள்ள நடிகர் சூர்யாவுக்கு நடிகர் மம்முட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “தேசிய விருது, அழகான பிறந்தநாள் பரிசு. அன்புள்ள சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான ஆந்தாலஜி படமான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த உறுதுணை நடிகர் விருது லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கும் பெஸ்ட் எடிட்டிங் விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மண்டேலா’. இத்திரைப்படம் முதலில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

மண்டேலா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது இயக்குனர் மடோன் அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 68-வது தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற அனைத்து விருதாளர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.