போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம் என சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்துக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் காவல் துறையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது இந்திய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

அந்த வகையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பென்னிக்ஸ், அவரது தந்தை கொல்லப்பட்ட விவகாரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, “போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம் எனவும், பாதுகாவலர்கள் ஒடுக்குபவர்களாக மாறுவது மிகவும் மோசமான ஒன்று எனவும் விமர்சித்துள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள ராகுல்காந்தி, இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க: சாத்தான்குளம் இரட்டைக் கொலை: திமுக 25 லட்சம் நிதி உதவி

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தக் கோரச் சம்பவத்துக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சினிமா பிரபலங்கள், அரசியல் விமர்சகர்கள், விளையாட்டுத் துறையினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ட்விட்டரில் ’JusticeForJeyarajAndFenix’ என்ற ஹேஸ்டேகில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நீதி கிடைக்க வேண்டுமென தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ’JusticeForJeyarajAndFenix’ ஹேஸ்டேக் தற்போது இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.