PSBB ராஜகோபாலன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த போக்சோ சிறப்பு நீதிமன்றம், அவரை 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் வரதாச்சாரி, அங்கு படித்த மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தொடர்ந்து புகார்கள் குவியத் தொடங்கின.

மாணவிகளுக்கு ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ராஜகோபாலனை வடபழனி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ராஜகோபாலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ராஜகோபாலன் வரதாச்சாரி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன் மீது வேண்டுமென்றே பொய்ப்புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ராஜகோபாலன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் ஆய்வாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதற்கிடையே ஆசிரியர் ராஜகோபாலன் எந்த ஆண்டு முதல் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார், அவரால் எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என்று காவல் ஆய்வாளர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை போக்சோ சிறப்பு கோர்ட்டில் இன்று (1-6-2021) நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

5 நாள் காவலில் விசாரிக்க காவல்துறை அனுமதி கோரிய நிலையில் 3 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ராஜகோபாலனை ஜூன் 3 ஆம் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

PSBB ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்கள்; விசாரணையில் சிக்கிய மேலும் 3 ஆசிரியர்கள்