வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6-06-2021) நேரில் ஆய்வு செய்தார்.

வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது ஜூன் 3 ஆம் தேதி உறுதியானது. அதில், ‘நீலா’ என்ற பெண் சிங்கம் 3 ஆம் தேதி உயிரிழந்தது. மேலும் 2 சிங்கங்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதியான சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. சிங்கங்களின் உடல்நிலையை கால்நடை மருத்துவர்களும், பூங்கா ஊழியர்களும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனால் மனிதர்களைப்போல வன விலங்குகளுக்கும், கோயிலில் வளரும் யானைகளுக்கும் தடுப்பூசி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று (6-06-2021) வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கங்களுக்கு கொரோனா ஏற்பட்டது குறித்தும், சிகிச்சை குறித்தும் நேரில் ஆய்வு செய்தார்.

பேட்டரி காரில் சென்று பாதிக்கப்பட்ட சிங்கங்களைப் பார்வையிட்டு அவை பராமரிக்கப்படும் இடங்கள், மற்ற விலங்குகள் பராமரிக்கப்படும் விதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம் கொரோனாவிற்கு பலி; மேலும் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று