அரசு அதிகாரிகளின் நிலத்தை கையகப்படுத்தினால் தான் விவசாயிகளின் வேதனை புரியும் என்று சேலம் – சென்னை 8 வழிச் சாலை திட்ட வழக்கு விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் 8 வழிச் சாலை திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மரங்கள் வெட்டப்படுவதாக மனுதாரர்கள் நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் பகுதியில் 500 மரங்கள் வெட்டப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், மங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை மீறினால், 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு திடை விதிக்க நேரிடும். எந்த சூழ்நிலையில் மரங்கள் வெட்டப்பட்டன என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

நில அளவைப் பணிகள் நடைபெறும் போது ஏன் மரங்களை வெட்டினீர்கள் ஒரு மரத்தை வெட்ட அனுமதி வாங்கிவிட்டு ஏராளமான மரங்களை வெட்டியுள்ளீர்கள். மரங்களை கள்ளத்தனமாக வெட்டுவதால் ஏன் 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்றெல்லாம் நீதிபதிகள் கேள்விகளை சரமரியாக எழுப்பியுள்ளனர்.

மேலும், அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் ஏழை மக்களின் நிலைமை உங்களுக்குப் புரியும் என்று நீதிபதிகள் காட்டமாகக் கூறினர்.

நில அளவீடு மற்றும் மரங்கள் வெட்டியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும், மரங்கள் வெட்டும் பணி எந்த சூழ்நிலையில் இருப்பதாக பதிலளிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.