அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்று தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அஞ்சல்துறை மொத்தம் 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும். அஞ்சல்துறை நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் கடிதங்களை நாட்டின் எந்த ஒரு இடத்திலிருந்தும் எந்த ஒரு இடத்திற்கும் பட்டுவாடா செய்து வருகிறது..

அஞ்சல் துறையில் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கான மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது. மற்ற மாநில மொழிகள் அனைத்தும் புறக்கணிப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ் மொழி புறக்கணிப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2019 ஆம்ஆண்டு நடைபெற்ற அஞ்சலக தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்றன. இதனைத்தொடர்ந்து அந்தந்த மாநிலங்களில் அந்த மொழிகளில் அஞ்சல் பணி தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இனிவரும் அஞ்சலக தேர்வுகளில் ஆங்கிலம், இந்தி மொழிகளுடன் தமிழிலும் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ள அஞ்சலக தேர்வில் தமிழ் மொழி மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்த்துள்ளது.

போட்டி தேர்வுகளில் ஒரு மாநிலத்தின் மொழி புறக்கணிக்கப்பட்டால், கிராமப்புற இளைஞர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை புரிதல் கூட மத்திய அரசுக்கு இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தமிழ் மொழியில் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது.

டிரம்பின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்