நீதிமன்ற தீர்ப்பை அனுமதிக்க மாட்டோம் என்று ஹிந்துவ பிற்போக்கு தரப்பினர் போராடி வருகின்றனர். இன்னொரு பக்கம், அரசியல் செயற்பாட்டாளர்களின் போராட்டத்துக்கு சபரி மலையை பயன்படுத்தக் கூடாது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
 
சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு இருந்த வயது கட்டுப்பாட்டை நீக்கி அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழகத்திலிருந்து பெண்கள் சபரிமலைக்கு நாளை செல்கின்றனர். அவர்களை மனிதி என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது.
 
தமிழகத்தின் இருந்தும் மட்டும் அல்ல பல் மாநில வெவ்வேறு பகுதிகளிலிருந்து, இளம்பெண் ஐயப்ப பக்தர்கள் சுமார் 50  பேர், விரதம் மேற்கொண்டு சபரி மலைக்கு செல்ல தயாராகியுள்ளனர். “ பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவை பார்த்து சபரி மலைக்கு செல்ல உதவ வேண்டும் என்று பெண்கள் கேட்டுக் கொண்டனர்.
 
அதன் அடிப்படையில் அவர்களுடன் சென்று உதவுகிறோம். பக்தர்களுக்கு பாதுகாப்பு கோரி கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தோம். சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருப்பதாக கேரள முதல்வர் பதில் அளித்துள்ளார். கேரள காவல்துறையினர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்” என்றார் மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி.
 
இந்த நிலையில் மனிதி அமைப்பு மேற்கொள்ளும் முயற்சியின் நோக்கம் பற்றி கேட்டோம் “ கடவுள் நம்பிக்கையுடைய பெண்கள் சபரிமலைக்கு செல்ல நாங்கள் உதவி புரிகிறோம்.
 
அது மட்டுமே தான் எங்கள் பணி. ஆண்களால் ஒருங்கிணைந்து ஒரு இடத்துக்கு செல்ல முடியும். பெண்கள் ஒருங்கிணைந்து திட்டமிடுவது கடினம். எனவே உதவுகிறோம். “ என அவர் விளக்கினார்.
 
மேலும் அவர் பேசும்போது, “கடவுள் நம்பிக்கை உள்ள பெண்களுக்கு சம உரிமைகளை பெற்று தரும் பொறுப்பு சமூக செயற்பாட்டாளர்களிடம் இருக்கிறது. பெரியாரும் அம்பேத்கரும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு போராட்டங்களின் மூலம் உணர்த்தியது அதனைத்தான்.
 
கோயில் நுழைவுக்காக தலித் மக்களை ஒருங்கிணைக்கும் இடதுசாரி கட்சிகளை பார்த்தோ, பெரியாரிய அமைப்புகளை பார்த்தோ கேள்விகள் எழாத போது பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பெண்கள் அமைப்புகளை பார்த்து மட்டும் ஏன் இந்த கேள்வி வருகிறது?” என கேட்டார்.
 
“மனிதி அமைப்பு கடவுள் மறுப்பாளர்களின் அமைப்பு அல்ல. மாலை போடாத ஆண்கள் செல்லும் பாதையில் எங்களை அனுமதிக்க வேண்டும். மாலை போட்டு, விரதம் மேற்கொண்டு வரும் பெண்கள் 18 படிகளை ஏறி மேல செல்ல அனுமதிக்க வேண்டும். வீண் விவாதங்களை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பும் நோக்கத்துடன் செல்லவில்லை” என்று விளக்கமளிக்கிறார் செல்வி.
 
மனிதி அமைப்பைச் சேர்ந்த சுசீலா, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. எனவே நான் உடன் செல்லவில்லை. பாதுகாப்பும் உதவியும் கேட்ட பெண்களுடன் எங்கள் அமைப்பினர் செல்கிறோம். இதன் மூலம் பெண்கள் உரிமைகள் குறித்த ஒரு உரையாடலை அங்கு இருக்கும் மக்களோடு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்” என்றார்.